அரியலூர் மாவட்டத்தில், 29 பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்படும் - கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 29 பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூரில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் சப்-கலெக்டர் தலைமையில், பல்துறை அலுவலர்களை கொண்டு, 5 மண்டல கண்காணிப்பு குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடக்கிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் குறித்து இந்த மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் பாலாஜி, பூங்கோதை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் கிருஷ்ணமூர்த்தி, கதிரவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story