தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டயக்கணக்காளர் (ஆடிட்டர்) படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். சந்திரசேகரன் எம்.பி., செம்மலை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
25 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சிஇன்றைய சூழ்நிலையில் இந்திய அளவில் 10 லட்சம் பட்டயக் கணக்காளர் தேவை உள்ளது. ஆனால் நமது நாட்டில் 2 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எதிர்காலத்தில் மாணவ, மாணவிகள் இந்த பட்டயக் கணக்காளர் படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பட்டயக்கணக்காளர் படிப்பை நிறைவு செய்யும் வகையில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்ட அளவிலும் 70 பயிற்சி மையங்களில் 500–க்கும் மேற்பட்ட பட்டயக்கணக்காளர்கள் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்கள். இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அரசு மற்றும் அரசு பயன் பெறும் பள்ளிகளில் பட்டயக் கணக்காளர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. 12–ம் வகுப்பு முடித்தவுடன் இப்பயிற்சியை பெறலாம்.
வருகிற ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை விட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிர்களின் கல்வி தரம் உயர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உலக தரத்திலான கல்வியை வழங்கும் வகையில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சியில் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் நந்தகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல், தென்னிந்திய பட்டயக்கணக்காளர் நிறுவன செயலாளர் ஜலபதி, டெல்டா ஸ்குவார்டு கமாண்டர் ஈசன், கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜரத்தினம், மேட்டூர் நகராட்சி முன்னாள் தலைவர் லலிதா சரவணன், முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எடப்பாடி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 36 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 900 மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் குளம், ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளன. முதல்–அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்றார்.