மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் பேட்டி


மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2019 12:15 AM GMT (Updated: 24 Nov 2019 12:15 AM GMT)

மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நடந்து உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

கோவை,

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பார்வையாளருமான சஞ்சய் தத், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச்செயலாளர் அருள் பெத்தய்யா ஆகியோர் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர்கள் வி.எம்.சி.மனோகரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றதை கண்டித்தும் கோஷமிட்டனர்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றை ஆதரித்த தமிழக அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு 9 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜனதா, தவறான பொருளாதார கொள்கை காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று கூறிய பா.ஜனதா, அதே கருப்பு பணத்தை கொண்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி செலவு செய்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தேர்தல் செலவுக்கு தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகீம் மற்றும் பலர் பணம் நன்கொடையாக கொடுத்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் குதிரை பேரம் நடந்து உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் கால அவகாசம் கொடுக்காமல் இருந்தது அரசியல் நெறிமுறைகளை மீறியது ஆகும்.

மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் சேர்ந்து பல்வேறு செயல்களை செய்து உள்ளனர். அங்கு ஜனநாயக படுகொலை நடந்து உள்ளது. இதை ஒருபோதும் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அங்கு பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் டுவிட்டரில் வாழ்த்து கூறிய மோடி, தமிழகம் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது ஒரு பதிவைகூட வெளியிடவில்லையே. பா.ஜனதா மக்கள் விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர் வீனஸ் மணி, கோவை செல்வன், சவுந்திரகுமார், பச்சை முத்து, ஹரிஹரசுதன், நவீன்குமார், மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், ராம்கி, கே.என்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story