இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை


இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 7:52 PM GMT)

விவசாயிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அரிதான அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் செய்தனர்.

திருச்சி,

திருச்சி மண்ணச்சநல்லூர் குணசீலம் அருகே வடக்கு சித்தாம்பூரை சேர்ந்தவர் மூக்கன் (வயது 47). விவசாயியான இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு மூக்கனுக்கு சிறுநீரக குழாயில் திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சிறுநீர் சரிவர போக முடியாமல் அவதிஅடைந்தார். நாளடைவில் அடைப்பு பெரிதாகி சொட்டு, சொட்டாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறுநீர் வெளியே வராததால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து 4 மாதங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

சிக்கலான அறுவை சிகிச்சை

இந்த அறுவை சிகிச்சையை சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன், டாக்டர்கள் கண்ணன், கார்த்திகேயன், ராஜசேகரன், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர். இரைப்பையில் இருந்து எடுக்கப்பட்ட சதை மூலம் 15 சென்டிமீட்டர் குழாய் அமைத்து, அந்த குழாயை சிறுநீரக பாதையில் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 7 மணிநேரத்தில் டாக்டர்கள் குழுவினர் செய்துள்ளனர். இத்தகைய அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே முதன்முறையாகவும், உலக அளவில் 2-வது முறையாகவும் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ரூ.5 லட்சம் செலவாகும்

மேலும், இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், “திருச்சி அரசு மருத்துவமனையில் அரிதான இந்த அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளனர். தற்போது விவசாயி நலமோடு இருப்பதுடன் எவ்வித சிரமமும் இன்றி சிறுநீர் கழித்து வருகிறார். இதுபோன்ற அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்வதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும்” என்றார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story