கார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில்: மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் - இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது


கார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில்: மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் - இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 26 Nov 2019 4:23 AM IST (Updated: 26 Nov 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

கார்ணாம்பட்டு அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

வேலூர்,

வேலூரை அடுத்த குகையநல்லூர் பகுதி கலிவர்தங்கள் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 49). இவர் ஒடுகத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மோட்டார்சைக்கிளில் கார்ணாம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். அதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மூலம் வாசுதேவனின், இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டன.

இதில் இதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.

வாசுதேவனுக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு சங்கீத்குமார் (22) என்ற மகனும், தீனுபிரியா (19) என்ற மகளும் உள்ளனர்.

Next Story