கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 107 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 107 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2019 10:30 PM GMT (Updated: 26 Nov 2019 7:33 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 107 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தமிழக அரசு வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினம் ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முதல்- அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கடந்த 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தை நேற்று நடத்துவதாக ஏற்கனவே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதனால் நேற்று காலை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்தராசு தலைமையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக கூடினர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் தேன்மொழி வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அமுதா, மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு ஆகியோர் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினர்.

இதையடுத்து திடீரென்று சத்துணவு ஊழியர்கள் பாலக்கரை ரவுண்டானா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஓடிச்சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரின்எச்சரிக்கையை மீறி சத்துணவு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆண்கள், 101 பெண்கள் என மொத்தம் 107 பேரை வலுக்கட்டாயமாக குண்டு, கட்டாக தூக்கி கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story