ஆடு, மாடு, கோழிகளை போல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது எடியூரப்பாவின் பழக்கம் ; குமாரசாமி கடும் தாக்கு
ஆடு, மாடு, கோழிகளை வாங்குவது போல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது எடியூரப்பாவின் பழக்கம் என்று தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சிக்பள்ளாப்பூரில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். இடைத்தேர்தல் முடிவு வரட்டும், அதன் பிறகு அதுபற்றி பார்க்கலாம். அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது. ஒருவேளை சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் வேட்பாளரை மாற்றியதாக கூறுகிறார்கள். அது தவறு. இந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் சுதாகர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவ்வாறு குற்றச்சாட்டுகளை கூறுவதின் மூலம், இந்த தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை பறிக்க முடியாது.
இடைத்தேர்தல் திடீரென வரவில்லை. பா.ஜனதா நடத்திய சட்டவிரோத செயல்களால் இந்த தேர்தல் வந்துள்ளது. கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஒரு நாள் கூட மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. என்னை அதிகாரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடக்கம் முதலே நடைபெற்று வந்தன. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து இடையூறுகளையும் சகித்து கொண்டு ஆட்சி நடத்தினேன்.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ஜனதாவினர் ஆடு, மாடு, கோழிகளை விலைக்கு வாங்குவது போல் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது எடியூரப்பாவின் பழக்கம். கூட்டணி அரசு கவிழ தகுதிநீக்க எம்.எல்.ஏ. சுதாகர் முக்கிய காரணம். பணம் அதிகமாக இருப்பதால், ஆணவ போக்குடன் நடந்துகொள்ளும் சுதாகரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இந்த பிரசாரத்தில் ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story