காலமுறை ஊதியம் வழங்க கோரி, சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் - 154 பேர் கைது
சேலத்தில் காலமுறை ஊதியம் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 154 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் அர்ச்சுனன், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி வரவேற்றார்.
இதில் சத்துணவு திட்டத்தில் ஒரே பதவியில் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சமையல் உதவி யாளர்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கூடுதல் மைய பொறுப்பாளர் பணிக்கு ஒரு நாளைக்கு ரூ.200 வழங்கிட வேண்டும். எரிவாயு சிலிண்டரை அரசு மையங்களுக்கு வழங்க வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்த்து பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை தொடர்ந்து, அதே மையத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து 122 பெண்கள் உள்பட 154 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story