வாகன சோதனையில் சிக்கிய ரூ.1½ கோடியை மீட்டு தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தவர் கைது


வாகன சோதனையில் சிக்கிய ரூ.1½ கோடியை மீட்டு தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 27 Nov 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் சிக்கிய ரூ.1½ கோடியை மீட்டு தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

சென்னை விருகம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்தவர் முகமது ரியாஜூதீன் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம் எனது நண்பரான சந்தோஷ்பால், கத்தார் நாட்டில் இருந்து செல்போன் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். அப்போது தனது உறவினர் மாத்யூ என்பவருக்கு சொந்தமான நிலம் மராட்டிய மாநிலம் புனேவில் இருப்பதாகவும், அந்த நிலத்தை விற்பதாக விலைபேசி என்னிடம் ரூ.1½ கோடி முன்பணமாக கேட்டார். அவர் கூறியதைபோல ரூ.1½ கோடியை கொடுத்தேன். அந்த பணத்தை அவர் தனது நண்பர்கள் மூலமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரர் வீட்டுக்கு காரில் கொண்டு சென்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி வழியாக சென்றபோது போலீசார் காரை நிறுத்தி் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் சந்தோஷ்பால் மூலமாக எனக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூர் தாழம்பூரை சேர்ந்த வெங்கடேஷ் (50) என்பவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் போலீசில் சிக்கிய பணத்தை மீட்டு கொடுப்பதாக என்னிடம் தெரிவித்தார். அப்போது தனக்கு சென்னையை சேர்ந்த சலீம்அகமது என்பவரை தெரியும் என்றும், அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதால் அவர் மூலமாக பணத்தை மீட்டுவிடலாம் என்றும் கூறினார். மேலும், பணத்தை மீட்க ரூ.36 லட்சம் செலவாகும் என்றார்.

அவரிடம் ரூ.36 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் கூறியதைப்போல எனது பணத்தை மீட்டு கொடுக்கவில்லை. இதுபற்றி வெங்கடேசிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

இந்த புகாரின்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து முகமது ரியாஜூதீனிடம் மோசடி செய்ததாக வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த வழக்கில் தொடர்புடைய சலீம்அகமதுவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story