கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 8:29 PM GMT)

மகராஜகடை அருகே கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குருபரப்பள்ளி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள கோதிகுட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 80). இவரது மனைவி நாகம்மா (60). கணவன், மனைவி இருவரும் அதே பகுதியில் தங்களது விவசாய தோட்டம் அருகே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் நாகம்மா வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தடியில் கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகம்மா கூச்சலிட்டார். அந்த நேரம் திடீரென்று கரடி நாகம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் நாகம்மாவிற்கு தலை, கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே நாகம்மாவின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் கரடியை அங்கிருந்து விரட்டினார்கள். இதையடுத்து அவர்கள் ரத்த காயத்துடன் கிடந்த நாகம்மாவை மீட்டு சிகிச்சைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நாகம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மகராஜாகடை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனசரகர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கரடி வந்த இடத்தையும், காயமடைந்த நாகம்மா குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் அதிகாரிகள் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் அச்சம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் 3 கரடிகள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் கூறினர். தற்போது அதில் ஒரு கரடி மட்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து தாக்கியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கரடியை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story