திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 21 பேர் கைது
திருச்செந்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவதால், சாலைகள் சேதம் அடைந்து உருக்குலைந்த நிலையில் உள்ளன.
எனவே திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் மழையில் சேதம் அடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலையில் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராஜா, திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் சங்க தமிழன், தமிழ்வாணன், ராஜ் வளவன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ் பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story