இடைத்தேர்தல் எதிரொலி: 4 தொகுதிகளில் மதுபானம் விற்க 3 நாட்கள் தடை


இடைத்தேர்தல் எதிரொலி:  4 தொகுதிகளில் மதுபானம் விற்க 3 நாட்கள் தடை
x
தினத்தந்தி 29 Nov 2019 4:30 AM IST (Updated: 29 Nov 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் மது பானம் விற்க 3 நாட்கள் தடை விதித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், கே.ஆர்.புரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி 4 தொகுதிகளிலும் உள்ள மதுக்கடைகள் திறக்கவும், மதுபானம் விற்பனை செய்யவும் 3 நாட்கள் தடை விதித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு நகரில் உள்ள சிவாஜிநகர், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், கே.ஆர்.புரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் 3-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து 5-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 4 தொகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்யவும், அந்த தொகுதிகளில் உள்ள மதுக்கடைகள், பார் மற்றும் கேளிக்கை விடுதிகள் திறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, இடைத்தேர்தலில் பெங்களூரு நகரில் உள்ள 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, டிசம்பர் 8-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 4 தொகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கவும், மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Next Story