நான் ‘கிளிசரின்’ போட்டு அழ வேண்டிய அவசியம் இல்லை; உன்சூரில் குமாரசாமி பேச்சு
பா.ஜனதாவினருக்கு மனிதநேயம் இருந்தால் தானே கண்ணீர் வரும். நான் கிளிசரின் போட்டு அழ வேண்டிய அவசியம் இல்லை என்று குமாரசாமி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மைசூரு மாவட்டம் உன்சூரில் நேற்று ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கே.ஆர்.பேட்டையில் நான் பிரசாரம் செய்தபோது அழுதேன். ஏழைகளின் கஷ்டங்களை கண்டால் நான் அழுதுவிடுவேன். இதை மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்பட பா.ஜனதா தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். சதானந்தகவுடாவை போல் எல்லாவற்றுக்கும் பல் இழித்து கொண்டு நிற்பது இல்லை.
கிளிசரின் போட்டுக் கொண்டு அழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் (சதானந்தகவுடா) நாடகமாடும் கட்சியில் இருந்து வந்துள்ளர்கள். பா.ஜனதாவினருக்கு மனிதநேயம் இருந்தால் தானே கண்ணீர்வரும். ஏழைகள் எவ்வளவு பேர் உங்களின் வீட்டு வாசலுக்கு வருகிறார்கள். நான் நாடகமாட வேண்டும் என்ற நோக்கத்தில் அழவில்லை.
சதானந்தகவுடாவிடம் இருந்து நான் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எத்தனை கிராமங்களுக்கு அவர் சென்றார். மக்கள் படும் கஷ்டங்களை கண்டு நான் கண்ணீர் விடுகிறேன். உங்களுக்கு இதயம் இருந்தால் தானே கண்ணீர் வரும்.
முதல்-மந்திரி பதவி தாருங்கள் என்று காங்கிரசாரின் வீட்டு வாசலுக்கு நான் செல்லவில்லை. அவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதனால் எங்கள் வீட்டுக்கு வந்தனர். தேவேகவுடா, எனது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, காங்கிரசாரை சேர்ந்த ஒருவரே முதல்-மந்திரி ஆகட்டும் என்று சொன்னார்.
ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி அடம்பிடித்து முதல்-மந்திரி பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும், ரூ.40 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். அரசு மனது வைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, 10 முதல் 15 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுத்திருக்கலாம். என்னை தேடி வந்த எம்.எல்.ஏ.க்களை நான் திருப்பி அனுப்பினேன். எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல. அதனால் என்னிடம் வந்தவர்களை சேர்த்துக்கொள்ளாமல் அனுப்பினேன். நான் அத்தகைய மனிதன்.
ஆனால் எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நோய் உள்ளது. அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுப்பதை பழக்கமாக வைத்துள்ளார். எடியூரப்பா செய்த செயலால் தான் இன்று இடைத்தேர்தல் வந்துள்ளது.
நான் சொகுசு ஓட்டலில் அறை எடுத்ததை பா.ஜனதாவினர் குறை சொல்கிறார்கள். அரவிந்த் லிம்பாவளி செய்த பெரிய காரியம் உங்களுக்கு தெரியாதா?. உங்கள் கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவரின் வேலைகளை பாருங்கள். வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அரசு பங்காளவை நான் பெற்றுக் கொள்ளாததால், ஓட்டலில் அறை எடுத்திருந்தேன். உங்களை போல் லீலைகள் செய்வதற்காக அறை எடுக்கவில்லை. தான் விலைபோனது போலவே, உங்களையும் விலைக்கு வாங்க எச்.விஸ்வநாத் இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். 2,000 ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து வருகிறார். அவரை நம்ப வேண்டாம்.
இந்த எச்.விஸ்வநாத் எத்தனை நாட்கள் என் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டிருப்பார். தொகுதி வளர்ச்சி குறித்து அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஏதோ அரசு திட்ட பணிக்கான டெண்டரை ஒதுக்கி தருமாறு கேட்டார். ஏனென்றால் அதில் இருந்து ‘கமிஷன்‘ கிடைக்கும் அல்லவா?. என்னை பற்றி தரம் தாழ்ந்து பேசுவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எச்.விஸ்வநாத்துக்கு இந்த தொகுதி மக்கள் ஒரு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Related Tags :
Next Story