மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு + "||" + AIADMK to contest local elections Confusion - DDV Dinakaran charges

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
தேவகோட்டை, 

தேவகோட்டையில் அ.ம.மு.க. நகர செயலாளர் கமலக்கண்ணன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் உள் கட்டமைப்புகள் சிதைந்து போய் உள்ளது. தற்போது பருவ மழை தொடங்கி தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் அந்த தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும். ஆண், பெண் இடஒதுக்கீடு, புதிய மாவட்டங்கள் ஒதுக்கீடு, பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு போன்ற வரையறை ஒழுங்காக இல்லாத காரணத்தினால் தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி ஆளும் அ.தி.மு.க.வினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எங்களது கட்சியின் பதிவு சம்பந்தமான நடைமுறை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

இந்தநிலையில் கட்சியின் சின்னம் இல்லாமலேயே ஏராளமான தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். என்னை சிலர் தனி மனிதன் என்றும், எனது கட்சி வெறும் கம்பெனி என்றும் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் என்னை கண்டு அவர்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. உளவுத்துறையை வைத்து சசிகலா அவர்களுடன் சேர்ந்து விடுவார் என கூறி வருகின்றனர். துரோகிகளோடு யாராவது இணைவார்களா? அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வில் சேருவார் என கூறுவது என்னை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பது உண்மை தான். மறைந்த தலைவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாதது வெற்றிடம் தானே.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்பதை மக்கள் அடையாளம் காட்டுவார்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் தான் தமிழக மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் மருத்துவராக வந்து அவர்கள் கிராமங்களில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். நடிகர் வடிவேலுவின் பேச்சும், தமிழக அமைச்சர்களின் பேச்சும் ஒன்றாக உள்ளது. அதாவது கோமளித்தனமாக பேசி வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது சம்பந்தமாக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன், மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் இறகுசேரி முருகன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன்கென்னடி, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் லாரன்ஸ், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் குருந்தூர் செல்வராஜ், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் இளங்குடி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.