பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Nov 2019 10:30 PM GMT (Updated: 30 Nov 2019 8:42 PM GMT)

பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. தலைமறைவான ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ்குமார் (வயது54). இவர், பள்ளி வகுப்பறையில் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் மகேந்திரமங்கலம் போலீசார், பள்ளிக்கூடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கல்வி அலுவலர்கள், மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த அறிக்கையை பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் அளித்தார். இதை தொடர்ந்து ஆசிரியர் பிரகாஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் தலைமறைவான ஆசிரியர் பிரகாஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story