தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - மத்திய அரசுக்கு பொதுமக்கள் தபால் அட்டைகளை அனுப்பினர்


தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - மத்திய அரசுக்கு பொதுமக்கள் தபால் அட்டைகளை அனுப்பினர்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 9:20 PM GMT)

தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி ஏராளமானவர்கள் மத்திய அரசுக்கு தபால் அட்டையில் எழுதி அனுப்பி வைத்தனர்.

ராமேசுவரம்,

தங்கச்சிமடத்தில் மூடப்பட்ட ரெயில் நிலையத்தை திறந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மத்திய அரசுக்கு தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அது போல் தங்கச்சிமடத்தில் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் நிலையம் செயல்பட்டு வந்தது. அதனை கடந்த 2007-ம் ஆண்டு ராேமசுவரம்-மானாமதுரை இடையே அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட போது ரெயில்வே துறையால் மூடப்பட்டது. இதனால் தங்கச்சிமடத்தில் உள்ள பொதுமக்கள் மதுரை, திருச்சி, சென்னை, திருப்பதி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களுக்கு ரெயில்களில் செல்ல வேண்டுமானால், தங்கச்சிமடத்தில் இருந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தங்கச்சிமடத்தில் மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி நேற்று தங்கச்சிமடம் ரெயில் நிலையம் மீட்பு குழுவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் தபால் அலுவலகம் வந்தனர்.

அவர்களுடன் மீட்பு குழுவின் தலைவர் ஞானபிரகாசம், செயலாளர் முருகேசன், பொருளாளர் ரப்பானி, துணை தலைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர்கள் பழனிவேல், சாமிநாதன், சியாமுதின் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தபால் அலுவலகத்தில் தபால் அட்டைகளை வாங்கினர்.

பின்பு தபால் அட்டையில், மூடப்பட்ட தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதன்மூலம் பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி மத்திய அரசுக்கும், ரெயில்வே மந்திரிக்கும் அனுப்பினர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தபால் பெட்டியில் அட்டைகளை போட்டு அனுப்பி வைத்தனர்.

Next Story