கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தாழ்வான பகுதிகளில் தண்ணீ்ர் தேங்கியது


கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தாழ்வான பகுதிகளில் தண்ணீ்ர் தேங்கியது
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 10:30 PM GMT)

புதுவை நகரம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டிய கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து தேங்கியது..

புதுச்சேரி,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே டிசம்பர் 2-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மழை கொட்ட தொடங்கியது. விடிய விடிய மழை பெய்துகொண்டே இருந்தது.

வெளுத்து கட்டியது

நேற்று பகலிலும் இந்த மழை நீடித்தது. சிறிது நேரம் இடைவெளி விடுவதும், பின்னர் வெளுத்துக்கட்டுவதுமாக கனமழை கொட்டியது.

இந்த மழை காரணமாக ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வடிய வழியின்றி மழை வெள்ளம் தேங்கியது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர்ந்து மழை கொட்டிக்கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால் அலுவலகம் செல்வோரும், வேறு வேலைகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 3.3 செ.மீ. மழையும், நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 5.79 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

கடல் சீற்றம்

மேலும் புதுவையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

பாகூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகாலையில் இருந்து அடை மழையாக கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசித்த மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பாகூர் அருகே மணப்பட்டு பகுதியில் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கியது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்கு வசித்தவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

தடுப்பணைகள் நிரம்பின

தொடர் மழையால் சித்தேரி மற்றும் கொம்மந்தான்மேடு தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதில் இளைஞர்கள் ‘டைவ்’ அடித்து குளித்து மகிழ்ந்தனர். கொம்மந்தான்மேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, அரியாங்குப்பம், காலாப்பட்டு பகுதியிலும் காலை முதல் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை.


Next Story