கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் விபத்து: கன்டெய்னர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி


கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் விபத்து: கன்டெய்னர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 6:09 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள திருமலை நகரை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி பிரமிளா (வயது 51). கிரு‌‌ஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சென்னப்பன் (61). முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பிரமிளா தனது மொபட்டில் கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்தார். அதே போல சென்னப்பனும் தனது மோட்டார்சைக்கிளில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

அந்த கன்டெய்னர் லாரி சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்யும் கவுண்ட்டர் மீது வேகமாக மோதியது. இதில் சுங்கச்சாவடி கவுண்ட்டர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அதில் உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த கிரு‌‌ஷ்ணகிரி அருகே உள்ள கள்ளுகுறுக்கியை சேர்ந்த பன்னீர் என்பவரது மனைவி கவிதா (34) படுகாயம் அடைந்தார்.

இதற்கிடையே நிற்காமல் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பிரமிளா, சென்னப்பன் ஆகியோர் மீதும் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த கவிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் உயிரிழந்த பிரமிளா, சென்னப்பன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(37) என்பதும், அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிவக்குமாரை கைது செய்தனர்.

இந்த விபத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story