கடையம் அருகே, காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
கடையம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான தென்னை மரங்களை நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பங்களாகுடியிருப்பை சேர்ந்தவர் தாமஸ். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. அங்கு அவர் தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவருடைய தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த 11 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி நாசம் செய்தன. மேலும் கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டு காட்டிற்குள் சென்று விட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் தாமசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து 28 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு சென்றுவிட்டன.
நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த தாமஸ் தென்னை மரங்களை யானைகள் நாசப்படுத்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகாத வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story