ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 6:59 PM GMT)

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் இத்தலார் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஊட்டிக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா, இலங்கை அரசியல் வேறுபாடு, வர்த்தகம் ஆகியவற்றை சரிசெய்துகொள்ள இந்தியா வந்து உள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் மத்திய அரசு இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணத்தை இணைத்து ஒரே மாகாணமாக மாற்றி சட்டத்துக்கு உட்பட்டு முதல்வர்களை தேர்வு செய்து தமிழர்களுக்கு முழு உரிமை அளிப்பது குறித்து பேச வேண்டும். இலங்கையில் சீனாவின் வர்த்தகம் மூலம் ஆதிக்கம் அதிகமாகும் போது, இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயற்சிக்கும். ஆனால், மிக அருகில் உள்ள நாடு இந்தியா என்பதை இலங்கை அரசு அறிந்து இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நேரடியாக தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மறைமுக தேர்தல் கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்கள் மூலம் தலைவர்களை தேர்வு செய்ய முயற்சிக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் பல லட்சம் பேருக்கு நேரடி தலைவர்களால் பணிகளை செய்ய முடியும். ஆனால், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுத்தால் அவர்கள் கூறும் பணிகளை மட்டுமே செய்ய இயலும். எனவே, உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த வேண்டும்.

தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறு. அ.தி.மு.க.வின் தோழமை கட்சி தான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு மாநில அரசுக்கு பங்கு தொகையாக தர வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி அடையும் என்ற பயத்தில் அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி கூட்டுறவு தத்துவத்தை தகர்த்து விட்டது. தற்போது உள்ளாட்சி தத்துவத்தை தகர்க்க நினைப்பது தவறு. ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் இணைந்தால், அவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அரசியல் கட்சிகளுக்கு ஏற்படாது.

மத்திய அரசின் கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிரானது. புதிய கல்விக்கொள்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக கொண்டு வரப்பட்டு, 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால், சாதாரண மக்களின் குழந்தைகள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் எனது மகனுக்கு கல்வி வராது என்று கூறியது மீண்டும் நடக்கும். விஞ்ஞான முறையில் அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டத்தை காமராஜர், ராஜீவ்காந்தி ஆகியோர் கொண்டு வந்து, இடஒதுக்கீடு வழங்கி தரமான கல்வியை அளித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று எதை கண்டுபிடித்தார். அவர் வெற்றிடம் என்று படம் எடுத்து நடிக்கலாம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று வெற்றிடம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யாமல் காப்பாற்ற வேண்டும். தனியாருக்கு விற்பனை செய்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் போன்றவை உயரும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறது. பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி சேவை வழங்காமல் தனியார் முதலாளிக்கு வழங்கப்பட்டு உள்ளது. பி.எஸ்.என்.எல்.க்கு வழங்கப்பட்டு இருந்தால் லாபகரமாக இயங்கி இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சியின் போது நாடு முழுவதும் ரூ.76 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வங்கி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாய கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மத்திய அரசிடம் பொருளாதாரத்தில் ரூ.7 லட்சம் கோடி பணப்பற்றாக்குறையால் இருந்து வருகிறது. இது 104 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தில் பின்தங்கினாலும் கற்பனையில் மிதக்கிறது. தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபத்துடன் கூடுதலாக 50 சதவீதம் கொடுக்க வேண்டும். கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் கணே‌‌ஷ், ராஜே‌‌ஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story