மழை வெள்ளத்தால் வழுதூர்-பெரியபட்டணம் சாலை மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு; பொதுமக்கள் அவதி


மழை வெள்ளத்தால் வழுதூர்-பெரியபட்டணம் சாலை மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 8:32 PM GMT)

மழை வெள்ளம் காரணமாக வழுதூர்-பெரியபட்டணம் சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்டது வழுதூர். இங்கு அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், ஓ.என்.ஜி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர அருகில் உள்ள ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டணம் போன்ற ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் வழுதூர்-பெரியபட்டணம் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி இந்த சாலை சேதமடைந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வழுதூர்-பெரியபட்டணம் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

மேலும் சாலையின் அருகில் உள்ள பெரிய ஊருணி முழுமையாக நிறைந்ததை தொடர்ந்து தண்ணீர் இந்த சாலையை மூழ்கடித்து செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த ஊருணிக்கு தண்ணீர் வரத்து இருந்துகொண்டே இருப்பதால் அருகில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை முதல் வழுதூர் வரையிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த சாலை தண்ணீரில் மூழ்குவதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி ஊருணிக்குள் விழும் ஆபத்து இருந்து வருகிறது.

எனவே இந்த சாலையை அகலப்படுத்தியும், உயர்த்தியும் அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர் சுலபமாக வழிந்தோடும் வகையில் ஆங்காங்கே தூம்பு பாலங்கள் அமைக்க வேண்டும் என்று சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல சின்ன ஏர்வாடி, கடற்கரை, மீனவர் குப்பம் மற்றும் சடைமுனியன் வலசை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீரை அப்புறப்படுத்த ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story