வீடூர் அணை நிரம்புகிறது, சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாயம் - குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது


வீடூர் அணை நிரம்புகிறது, சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாயம் - குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 10:36 PM GMT)

வீடூர் அணை நிரம்பி வருவதால் சங்கரா பரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. குடியிருப்பு களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

திருக்கனூர்,

திருக்கனூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூர், கூனிச்சம்பட்டு ஆகிய பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு இடையேயான படுகை அணை நிரம்பி தரை பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

செட்டிப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணி நிறைவு பெறாததால் அணையில் ஏற்கனவே தேக்கி வைத்திருந்த நீரும், மழைநீரும் அண்மையில் வெளியேறி வீணானது. இதை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக தடுப்பு ஏற்படுத்தினர். இந்த தடுப்பணை தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்கனூர் பகுதியில் பல்வேறு வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. காந்திநகர் 3-வது குறுக்கு தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீருடன், மழை தண்ணீர் வீடுகளுக்கு மத்தியில் உள்ள காலி மனையில் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரிசெய்ய மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருக்கனூர் அருகே தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் தற்போது 30 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. கனமழை தொடர்ந்தால், அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 31½ அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். எனவே வீடூர் அணையில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

அணை திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கலக்கும். இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், திருக்கனூர் போலீசார் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கராபரணி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் கால் நடைகளுடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story