மாவட்ட செய்திகள்

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்க கோரிக்கை + "||" + From Cheng Fort to Chennai Request for daytime train operation

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்க கோரிக்கை

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்க கோரிக்கை
தென்காசி ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேசுவரன், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
தென்காசி, 

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்க தென்காசி ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேசுவரன், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், மாவட்ட தலைநகராக திகழும் தென்காசியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரெயில் இயக்க வேண்டும்.

மேலும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு ரெயில் விட வேண்டும். தென்காசியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் தினமும் காலை, மாலையில் ரெயில்கள் இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேலும் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கும், கொல்லத்தில் இருந்து புனலூர், செங்கோட்டை வழியாக திருப்பதி, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி ஆகிய இடங்களுக்கும் ரெயில்கள் இயக்க வேண்டும்.

கோவை-மதுரை பாசஞ்சர் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9 மணிக்கு புறப்படுவதால், செங்கோட்டைக்கு காலையில் தாமதமாக வந்து சேர்கிறது. இதனால் அந்த ரெயிலில் வருகிறவர்கள் காலையில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அந்த ரெயில் இரவு 7.30 மணிக்கு புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.