மாவட்ட செய்திகள்

தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம் + "||" + From Vidur Dam to Second 2,000 cubic feet of surplus water discharge

தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழையின் காரணமாக வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 32 அடியாகும். பருவமழை காலங்களில் இந்த அணையில் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்காக அக்டோபர், நவம்பர் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதன் விளைவாக இந்த அணை நிரம்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர், பனமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையின் காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவான 32 அடியில் கடந்த வாரம் வரை 27 அடியாக நீர்மட்டம் இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்ததால் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்தது. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு அணை அதன் முழு நீர்மட்ட கொள்ளளவை எட்டிய நிலையில் அதற்கு பிறகு தற்போதுதான் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில், அணையின் கீழ் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அணையின் 9 மதகுகளில் 3 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து வந்த நிலையில் அதே அளவு தண்ணீரை அப்படியே உபரிநீராக பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர்.

தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி நீர்வரத்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை விரைந்து வெளியேற்றும் விதமாக 5 மதகுகளை பொதுப்பணித்துறையினர் திறந்து அதன் வழியாக வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அங்கிணிக்குப்பம், கணபதிப்பட்டு, விநாயகபுரம், ரெட்டிக்குப்பம், கயத்தூர், இளையாண்டிப்பட்டு, எம்.குச்சிப்பாளையம், இடையப்பட்டு, ஆண்டிப்பாளையம், பொம்பூர், திருவக்கரை ஆகிய 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணையின் நீர்வரத்து குறைந்தால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வீடூர் அணை நிரம்பி உள்ளதால் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அணையில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் அழகை பார்வையிட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

மேலும் அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அணைக்கு ஒவ்வொரு நிமிடமும் வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் கீழ்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அணை பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதேபோல் வீடூர் அணையை கடந்து பொம்பூர் வழியாக சிறுவை கிராமத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள், நேற்று வீடூர் அணை வரை மட்டுமே இயக்கப்பட்டது.

வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வரத்தை கண்காணித்து அதற்கேற்ப உபரிநீரை அணையிலிருந்து வெளியேற்றும்படி பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது.
2. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு அதிகாரிகள் தகவல்
கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 87 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.