தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் இந்துக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் இந்துக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:05 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் இந்துக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக நாம் இந்துக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மாநில தலைவர் கணே‌‌ஷ்பாபு பாண்டியன் தலைமையில் வந்தனர். அப்போது அதில் ஒருவர் வெங்காயத்தை மாலையாக அணிந்து வந்திருந்தார். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுப்பதற்காக கொண்டு வந்த மனுவினை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குண்டர் சட்டம்

தற்போது சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்களை வசூல் செய்யக்கூடாது.

வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருவதன் காரணத்தினால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினருடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையை குறைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மழைநீர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள திருவத்தேவன் ஊராட்சியில் உள்ள சுப்பம்மாள் சத்திரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சுப்பம்மாள்சத்திரம் மீனவ கிராமத்தில் 65 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். முடியன் ஆற்றில் வரக்கூடிய மழைவெள்ளப்பெருக்கு நீரை எங்கள் பகுதி வழியாக திறந்து விட்டால் நாங்கள் செல்லும் கடற்கரை சாலை மற்றும் பைபர் படகுகள் அடித்து செல்லப்படும்.

எனவே மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீரை கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story