மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியல்


மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2019 4:30 AM IST (Updated: 3 Dec 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் சத்தியன் (வயது 50). மனநலம் பாதிக்கப்பட்டவரான, இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மாலை வீட்டிற்கு வந்தபோது அவரது கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதற்கான அடையாளம் இருந்துள்ளது. மேலும் அவர் தனது கையில் பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.1100 வைத்திருந்தார். இதுகுறித்து அவரது தாய் லோகாம்பாள் மற்றும் உறவினர்கள் கேட்டபோது, தனக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது தாய் லோகாம்பாள் புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் விசாரித்தனர். அப்போது, குளித்தலை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றதும், இதில் சத்தியனுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருப்பதும் தெரியவந்தது.

சாலை மறியல்

இந்தநிலையில் மருத்துவமனை பணியாளர்களிடம், மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணம் ஆகாத ஒருவருக்கு அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் எப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யலாம் என உறவினர்கள் கேட்டனர். அதற்கு மருத்துவமனை பணியாளர்கள் உரிய பதில் அளிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த சத்தியனின் உறவினர்கள், டாக்டர் மற்றும் பணியாளர்களை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story