பெங்களூரு விமான நிலையத்தில், மாதந்தோறும் 10 ஆயிரம் கிலோ ‘மைசூருபாகு’ விற்பனை: நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இட்லியை ருசிக்கும் பயணிகள்


பெங்களூரு விமான நிலையத்தில்,  மாதந்தோறும் 10 ஆயிரம் கிலோ ‘மைசூருபாகு’ விற்பனை: நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இட்லியை ருசிக்கும் பயணிகள்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:48 PM GMT (Updated: 2 Dec 2019 11:48 PM GMT)

பெங்களூரு விமான நிலையத்தில் மாதந்தோறும் 10 ஆயிரம் கிலோ ‘மைசூருபாகு’ விற்பனை செய்யப்படுவதோடு, நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இட்லியை பயணிகள் வாங்கி ருசிக்கிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. ஆண்டுக்கு பெங்களூரு விமான நிலையத்தை 33 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் விமான நிலையத்தில் பயணிகள் விமான பயணம் மேற்கொள்ள செல்லும் இடத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி விமான நிலைய பயணிகளின் மத்தியில் ‘மைசூருபாகு’ அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது மாதந்தோறும் 10 ஆயிரம் கிலோ ‘மைசூருபாகு’ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. பெரும்பாலான பயணிகள் அனைவரும் தாங்கள் செல்லும் ஊர்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ அதிகமாக ‘மைசூருபாகு’ வாங்கி செல்கிறார்கள்.

மேலும் விமான நிலையத்தில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்டுகளில் அதிகமாக விற்பனை செய்யும் உணவுகளில் முதல் இடம் இட்லி பிடித்துள்ளது. அதாவது தினமும் பெங்களூரு விமான நிலையத்தில் 10 ஆயிரம் இட்லியும், 5 ஆயிரம் தோசையும் பயணிகள் வாங்கி ருசித்து வருவதும் தெரியவந்து உள்ளது.

‘மைசூருபாகு’ யாருக்கு சொந்தம் என்று அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பிரச்சினை எழுவது உண்டு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு என்றும், கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகத்துக்கு என்றும் விவாதிப்பதும் உண்டு. மைசூரு மன்னர் கிருஷ்ணராஜ உடையார் மைசூரு அரண்மனையில் தயாரிக்கப்பட்டதால் இனிப்பு பலகாரம் தான் ‘மைசூருபாகு’ என்று கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இதை தமிழகத்தை சேர்ந்த சிலர் மறுக்கிறார்கள். இதனால் ‘மைசூருபாகு’வுக்கு புவிசார் குறியீடு வாங்க கர்நாடகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story