உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில், மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்


உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில், மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:45 PM GMT (Updated: 3 Dec 2019 3:16 PM GMT)

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பெரம்பலூர்,

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி. பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடந்தது. பாலக்கரையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கோ‌‌ஷங்களை எழுப்பியவாறும், விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று, பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கணிப்பாய்வு மற்றும் மதிப்பாய்வு அலுவலர் வினோத்கண்ணா மற்றும் நம்பிக்கை மைய ஆற்றுனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி கலெக்டர் சாந்தா தலைமையில் ஏற்று கொள்ளப்பட்டது.

மாணவ- மாணவிகள்

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை, இந்தியன் இளஞ்செஞ்சிலுவை சங்கம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தலைமையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கருப்புசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட 620 இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளும், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் 50 கவுன்சிலர்களும் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வலம் அரசு மருத்துவமனை, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வளைவு வரை சென்று, மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்) இந்தியன் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளை செயலாளர் ஜெயராமன், மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, பெரம்பலூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிரு‌‌ஷ்ணன் (வேப்பூர்), மாயகிரு‌‌ஷ்ணன் (பெரம்பலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கு பின்னர் நடந்த விழாவில் கடந்த ஓராண்டுகளில் 1,800 அலகு(யூனிட்) ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு செய்த உதிரம் நாகராஜனுக்கு ‘குருதிக் கொடையாளர்‘ என்ற விருது வழங்கப்பட்டது.

Next Story