தூத்துக்குடியில், தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம் - சேதம் அடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்


தூத்துக்குடியில், தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம் - சேதம் அடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:00 PM GMT (Updated: 3 Dec 2019 8:28 PM GMT)

தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மழையால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

வடகிழக்கு பருவமழையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகாலை 1-30 மணி முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் சாரல் மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு லேசான வெயில் அடித்தது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. கே.டி.நகர் பகுதியிலும் அதிகளவில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதையடுத்து தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநகரில் தண்ணீர் தேங்கிய இடங்களில் 50 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. போடி, குழித்துறை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த டேங்கர் லாரி உள்பட 11 லாரிகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் 3-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் மாற்றுப்பாதையில் சென்றனர்.

தொடர் மழையால் தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 16, காயல்பட்டினம் - 41, குலசேகரன்பட்டினம் - 36, விளாத்திகுளம் - 10, காடல்குடி - 13, வைப்பார் - 9, சூரங்குடி - 3, கோவில்பட்டி - 13, கயத்தாறு - 2, கடம்பூர் - 4, ஓட்டப்பிடாரம் - 9, வேடநத்தம் - 3, கீழஅரசடி - 10, எட்டயபுரம் - 11, சாத்தான்குளம் - 23.6, ஸ்ரீவைகுண்டம் - 7, தூத்துக்குடி - 8.4

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் திறன் கொண்ட மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் அகற்றும் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை அகற்றும் பணி நடக்கிறது. ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்று எடுக்கும் நிலை உள்ளது. இதே போன்ற நிலை லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ளது. இதனால் தண்ணீரை முழுமையாக அகற்றுவதற்காக அந்தந்த பகுதிகளில் ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டு, அதில் தேங்கும் தண்ணீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்ட பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் இதுவரை பெய்த மழை காரணமாக 352 வீடுகள் பகுதியாகவும், 58 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்து உள்ளன. 4 கால்நடைகள் இறந்து உள்ளன. மாவட்டத்தில் உள்ள 637 குளங்களில் 212 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 193 குளங்கள் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 91 குளங்கள் 51 முதல் 75 சதவீதமும், 134 குளங்கள் 26 முதல் 50 சதவீதமும், 7 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. மழை காரணமாக சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story