செங்கோட்டை அருகே வறுமை வாட்டியதால், மனைவி-மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - மற்றொரு மகனுக்கு தீவிர சிகிச்சை


செங்கோட்டை அருகே வறுமை வாட்டியதால், மனைவி-மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - மற்றொரு மகனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 8:28 PM GMT)

செங்கோட்டை அருகே வறுமை வாட்டியதால் மனைவி-மகனை கொன்று விட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். உயிர் தப்பிய இன்னொரு மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கோட்டை, 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த எல்லாரிமுத்து மகன் கந்தசாமி (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (28). இவர்களுக்கு சின்முத்திரன் (6), ஏகாந்தமூர்த்தி (2) ஆகிய 2 மகன்கள்.

கந்தசாமிக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், போதிய வருமானம் இல்லாததால், குடும்பமே வறுமையில் வாடி வந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிய கந்தசாமி காபியில் வி‌‌ஷம் கலந்து தனது மனைவி-2 மகன்களுக்கும் கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விட்டனர்.

ஆனாலும் அவர்கள் உயிருடன் இருந்துள்ளனர். உடனே கந்தசாமி, மனைவி மற்றும் 2 மகன்களின் கழுத்தில் துண்டை போட்டு நெரித்துள்ளார். இதில் மனைவியும், மூத்த மகன் சின்முத்திரனும் துடிதுடித்து இறந்தனர். ஏகாந்தமூர்த்தி சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளான். அவனும் இறந்துவிட்டதாக நினைத்த கந்தசாமி, ‘எங்கள் சாவுக்கு என் வறுமை மட்டும் காரணம்’ என்று வீட்டின் சுவரில் எழுதி விட்டு, கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் கந்தசாமி வீடு நீண்டநேரமாக திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கந்தசாமி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.

அவருடைய மனைவி இந்துமதி, மகன் சின்முத்திரன் ஆகியோர் வாயில் நுரைதள்ளியவாறும் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையிலும் இறந்து கிடந்தனர். அருகில் மற்றொரு மகன் ஏகாந்தமூர்த்தி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தான்.

இதுகுறித்து புளியரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அவர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஏகாந்தமூர்த்தியை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கந்தசாமி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவன் ஏகாந்தமூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் மற்றும் புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமை வாட்டியதால் மனைவி, மகனை கொன்று விட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story