அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்: தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்


அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்: தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:45 PM GMT (Updated: 3 Dec 2019 8:31 PM GMT)

தக்கலை அருகே அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்

பத்மநாபபுரம்,

இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50), தொழிலாளி. இவருக்கு தங்கம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று மாலை குமார் ஸ்கூட்டரில் தக்கலைக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த அவருடைய நண்பர் மணிகண்டன் (49) பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார். பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

பலி

குமாரகோவில் சந்திப்பில் இருந்து எளுந்தன்கோட்டு கோணம் சாலைக்கு ஸ்கூட்டரை குமார் திருப்பினார். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. மேலும் அந்த பஸ் அருகில் வந்த ஆட்டோ மீதும் உரசியது. இதனால் அந்த ஆட்டோ சாலையோரம் சாய்ந்தபடி நின்றது. அரசு பஸ்சின் கண்ணாடியும் நொறுங்கியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அதே சமயம் ஆட்டோவில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

மணிகண்டனை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விசாரணை

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் விரைந்து வந்து, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story