அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் - அரசு பஸ்கள் மீது கல்வீச்சு


அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் - அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:41 PM GMT)

அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரையில் இருந்து ராஜபாளையத்துக்கு நேற்று முன் தினம் இரவு புறப்பட்ட அரசு பஸ் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னக்கடை பஜார் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் திருமலாபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் குமுளியிலிருந்து நெல்லை சென்ற அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திராநகர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் அந்த பஸ்சின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

அந்த பஸ்சை பெரியகுளத்தை சேர்ந்த ராஜா (34) என்பவர் ஓட்டி வந்தார். அவர் இந்த கல்வீச்சு சம்பவத்தில் காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதேபோல் ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் காளிதாசன் பஸ்சை ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை பாவடி தோப்பு சாலையில் அந்த பஸ் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அந்த பஸ்சின் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சிதறியது.

இதில் அந்த பஸ்சில் இந்த பயணிகள் அலறினர். ஒரு மூதாட்டியின் மீது கண்ணாடி சிதறல்கள் பட்டு அவர் காயமடைந்தார். மேலும் சிலருக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு தனபால், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் கல் வீசி அரசு பஸ்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story