பத்லாப்பூரில் மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியவர் கைது


பத்லாப்பூரில் மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2019 4:00 AM IST (Updated: 5 Dec 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

பத்லாப்பூரில் மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

தானே மாவட்டம் பத்லாப்பூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் துஷார் சாம்ரே. இவர் அம்பர்நாத் எம்.ஐ.டி.சி.யில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காஞ்சன் (வயது24). துஷார் சாம்ரே தனது மனைவியை பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

இதையடுத்து காஞ்சன் தனது பெற்றோர் வீட்டில் இருந்து சிறிதளவு பணத்தை வாங்கி வந்து கணவரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின்னரும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி வரும்படி மனைவியை துஷார் சாம்ரே தொந்தரவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காஞ்சன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று காஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக துசார் சாம்ரேயும் போலீசாரிடம் கூறினார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு துஷார் சாம்ரே மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் மனைவி காஞ்சனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துஷார் சாம்ரேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story