சாத்தூர் அருகே தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் - சமையல் செய்து சாப்பிட்டனர்


சாத்தூர் அருகே தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் - சமையல் செய்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 7:31 PM GMT)

சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்,

சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் விலக்கு சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் போடப்பட்டது. சில நாட்களில் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமானது. இந்த சாலை தரமானதாக போட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் ஒன்றிய செயலாளர் சரோஜா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன்பின்னும் சாலை போடப்படாததால் நேற்று முதல் சாலை போடும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கிராம பொதுமக்களும் சேர்ந்து கிராமத்தின் நடுவில் சமையல் செய்து சாப்பிட்டனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கண்ணன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரமோகன் முன்னிலையில் கிராமத்தை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கிராமத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சத்தியவதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மழை காலம் முடிந்தவுடன் சாலை போட்டு தரப்படும் என எழுத்துப்பூர்வமாக அளித்த பின்னர் போராட்டம் நிறைவு பெற்றது.

Next Story