58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, தடையை மீறி உண்ணாவிரதம்; 35 பேர் கைது


58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, தடையை மீறி உண்ணாவிரதம்; 35 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 7:57 PM GMT)

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 58 கிராம கால்வாய் திட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் தண்ணீர் திறப்பதற்கு நிரந்தர அரசாணை பெற்றுத்தரக்கோரியும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று தடையை மீறி 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர் அமைப்பினர் உசிலம்பட்டி- தேனி சாலையில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோவில் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரை, போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டது. தொடர்ந்து தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

58 கிராம பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் சிவப்பிரகாசம், சின்னன், முனியாண்டி, வழக்கறிஞர் சொக்கநாதன், இளைஞர் அமைப்பை சேர்ந்த அஜித்பாண்டி உள்பட 35 பேரை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story