குழந்தைகளின் கல்விக்கூடமான அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்


குழந்தைகளின் கல்விக்கூடமான அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 8:56 PM GMT)

குழந்தைகளின் கல்விக்கூடமான அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி அருகே உள்ள சாலையையொட்டி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான ஆரம்ப கல்விக்கூடமாகவும், சத்துணவு மையமாகவும் இந்த அங்கன்வாடி மையம் திகழ்கிறது.

இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த அங்கன்வாடி மையம் முன்பு மழைநீர் தேங்குகிறது. இது பற்றி ஏற்கனவே ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அங்கன்வாடி மையத்தின் வாயிற்பகுதியையொட்டி சிமெண்டு தளம் அமைக்கப்பட்டதோடு, மழைநீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கப்பட்டது.

நோய் பரவும் அபாயம்

ஆனாலும் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தப்படாத நிலையில், மழைபெய்யும்போது அந்த மையத்தின் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கும் நிலை தொடர்கிறது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் அந்த மையத்தின் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், அதில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக அங்கன்வாடி மையத்தில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுமோ? என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி மைய வாசலுக்கு எதிரே மழைநீர் குளம்போல் தேங்குவதால், குழந்தைகளை உள்ளே அழைத்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

வடிகால் வசதி

மேலும் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தையொட்டி அந்த அங்கன்வாடி மையம் உள்ளதால் அந்த சாலை வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் குழந்தைகளை சாலையை கடந்து அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கன்வாடி மையத்திற்கு முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க முறையாக வடிகால் வசதியும், அந்த மையத்தின் அருகே சாலையில் வேகத்தடையும் அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story