பெற்றோர்களை விட பிள்ளைகளின் எண்ணம், சிந்தனைகள் உயர்வாக இருக்கிறது - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேச்சு


பெற்றோர்களை விட பிள்ளைகளின் எண்ணம், சிந்தனைகள் உயர்வாக இருக்கிறது - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேச்சு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 8:18 PM GMT)

பெற்றோர்களை விட பிள்ளைகளின் எண்ணம், சிந்தனை மிகவும் உயர்வாக இருக்கிறது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.

செய்யாறு, 

செய்யாறு தாலுகா வாழ்குடை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை தொடக்கவிழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எல்.நடராஜன் தலைமை தாங்கினார். செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலா, முன்னாள் மாணவர்கள் எஸ்.பாரி, இ.உதயகுமார், கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நம்முடைய எதிர்காலத்திற்கான கனவினை பள்ளி பருவத்திலேயே காணவேண்டும். எதிர்காலத்திற்கான கனவு, ஏக்கம் இருந்தால் தான் சாதிக்க முடியும். பெற்றோர்கள் தங்களுடைய கனவை பிள்ளைகளிடம் திணிக்க நினைக்கிறார்கள். பெற்றோர்களை விட பிள்ளைகளின் எண்ணம், கனவு, சிந்தனை மிகவும் உயர்வாக இருக்கிறது.

பிள்ளைகளின் செயல்பாடுகளுக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். பிள்ளைகளை செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணியுங்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், தடுமாறுபோது கைகொடுத்து வழிநடத்துங்கள். பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். நமக்குள் இருக்கும் பயத்தால் தான் பிள்ளைகளை சுயமாக சிந்திக்க விடுவதில்லை. பிள்ளைகள் சுயமாக சிந்தித்தால் சிறந்த எதிர்காலத்தினை அடைவார்கள்.

சமுதாயத்தில் கல்வியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும். நீங்கள் படித்த கல்வி உங்களை எப்போதும் காப்பாற்றும்.

இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டார். மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கலெக்டர் சென்ற சிறிதுநேரத்தில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றி பேசினார். அவர் பேசுகையில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும். இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரத்தை வழங்குகிறேன் என கூறி பணத்தை வழங்கினார்.

Next Story