பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அநாகரிகம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்கிறார்


பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அநாகரிகம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-08T02:35:28+05:30)

‘பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அநாகரிகம் ஆகும்‘ என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று பழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழனி,

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருப்பது உணவு கலப்படம் தான். கலப்படம் செய்வோரை தண்டித்து, நோயாளிகளாக மக்கள் மாறுவதை குறைக்காமல் தமிழகத்தில் கூடுதலாக மருத்துவ கல்லூரிகளை திறப்பது சாதனை அல்ல, வேதனையே. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதில்லை. ஆனால் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மதுவிலக்கு, மதுகொள்கையை ஆய்வு செய்த எந்தவொரு ஆணையமும் கள்ளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்தது இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கான தடை தொடர்ந்து வருகிறது. கள் ஒரு போதைப்பொருள் என நிரூபித்தால் கள் இயக்கம் கலைக்கப்படும். ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.

அடுத்த மாதம் (ஜனவரி) 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி போராட்டம் நடத்தப்படும். இலவசம், தள்ளுபடி, மானியம், சலுகை போன்றவை வழங்கியதால் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு போல, பயிர் காப்பீட்டையும் தனிநபர் காப்பீடாக மாற்றினால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவர்.

பத்ம விருதுகள் வழங்குவதில் விவசாய துறைக்கு மட்டும் மத்திய அரசு பாராமுகம் காட்டுவது வேதனைக்குரியது. பொங்கல் பரிசுத்தொகுப்பு என்பது மக்களின் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் விடுக்கப்பட்ட சவால். தமிழகத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் தடைவிதிக்க முடியாது. ஆனால் அதேநேரத்தில் அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story