கலப்பட பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


கலப்பட பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 2:30 PM GMT)

கலப்பட பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நகருக்கு வரும் பக்தர்கள் பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தாமல் நகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள் மற்றும் திறந்தநிலையில் வைத்திருக்கும் தின்பண்டங்கனை வாங்கி உண்ண வேண்டாம். நகராட்சியால் வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பருகவேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருக வேண்டாம்.

நகரில் அன்னதானங்கள் வழங்கும் இடங்களில் வினியோகிக்கும் உணவுப் பொருட்களை வாங்கி உண்டபின் இலை, பேப்பர் பிளேட்டுகள் மற்றும் பேப்பர்களை தெருவில் வீசி எறிய வேண்டாம். ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

அன்னதானம் வழங்குபவர்கள் அன்னதானம் முடிந்த பின்னர் அவ்விடங்களை சுத்தம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படின் ஒவ்வொரு பஸ் நிலையத்திற்கு அருகிலும் அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தின்பண்டங்களை விற்கும் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஈக்கள் மொய்க்காமல், தூசி படியாமல் மூடிவைத்து விற்பனை செய்யவேண்டும். நகரில் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளையும், ஈக்கள் மொய்க்கும் பண்டங்களையும் பொது மக்கள் நலன் கருதி பறிமுதல் செய்யவும், அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவு விடுதிகளில் பொதுமக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீரையே வினியோகிக்க வேண்டும். உணவு பரிமாறும் இடம், சமையலறை, பொருட்கள் வைப்பு அறை ஆகியவற்றில் ஈக்கள் மொய்க்காமல் உணவு விடுதி உரிமையாளர்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் கையுறைகள் அணிந்து கொண்டு உணவு பரிமாற வேண்டும்.

உணவு விடுதிகள் மற்றும் தேநீர் கடைகளில் கலப்படமில்லாத பொருட்களையே பயன்படுத்த வேண்டும். இதனை சுகாதார ஆய்வாளர்கள் சோதனை மேற்கொள்ள உள்ளனர். கலப்பட பொருட்ளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகையிலை பொருட்கள் ( பீடி, சிகரெட், பான்பராக், குட்கா போன்றவை) விற்பவர் மற்றும் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story