சத்தியமங்கலம் காந்திநகரில் டாஸ்மாக் கடை அமைக்க தொடர் முயற்சி; பொதுமக்கள் போராட்டம் - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு


சத்தியமங்கலம் காந்திநகரில் டாஸ்மாக் கடை அமைக்க தொடர் முயற்சி; பொதுமக்கள் போராட்டம் - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 6:46 PM GMT)

சத்தியமங்கலம் காந்திநகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.

சத்தியமங்கலம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்திநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மதில் சுவரையொட்டி தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கட்டிட பணி நடந்து வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் பணி நடந்து கொண்டிருந்தது.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று டாஸ்மாக் கடை முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பணி நடைபெறவில்லை.

ஆனால் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணியாளர்கள் வரக்கூடும் என்று பொதுமக்கள் சந்தேகித்தனர். இதனால் நேற்று முன்தினம் இ்ரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பே உட்கார்ந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை கட்டிட பணிக்காக தொழிலாளர்கள் சிலர் அங்கு வந்தனர். இதை பார்த்ததும் அவர்களை பொதுமக்கள் விரட்டி அடித்தனர். காந்திநகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி அளவில் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடுவதாகவும், வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாகவும் அறிவித்து நோட்டீஸ் அச்சடித்து காந்திநகர் பகுதியில் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதேபோல் சத்தி-கோபி மெயின்ரோட்டில் உள்ள அரியப்பம்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நேற்று காலை ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ெ்பாதுமக்கள் காலை 10 மணி அளவில் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தி உள்வட்ட நில வருவாய் அலுவலர் தாமரைகனி, சத்தியமங்கலம் போலீசார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடிமகன்களால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது.’ என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், ’இதுசம்பந்தமாக கோரிக்கை மனுவை சத்தியமங்கலம் தாசில்தாரிடம் கொடுங்கள். அதன்பின்னர் பேசி முடிவு எடுக்கலாம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story