கடற்கரை போலீஸ் நிலையத்தில் கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்

சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கைதான வாலிபர், வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு கைவிலங்குடன் தப்பிச்சென்று விட்டார்.
பெரம்பூர்,
சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் சாலையோரம் வசித்து வருபவர் அருண் (வயது 25). நேற்று முன்தினம் இரவு இவர், குடிபோதையில் அதே பகுதியில் சாலையோரம் வசிக்கும் 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அருணை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை வடக்கு கடற்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அருணை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
கைவிலங்குடன் தப்பி ஓட்டம்
அதில் அருண் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்ததால் காலையில் விசாரணை நடத்தலாம் என்று கருதிய போலீசார், அருணை கைவிலங்குடன் போலீஸ் நிலையத்தில் அமர வைத்திருந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு செல்லவேண்டும் என்று போலீசாரிடம் அருண் கூறினார். இதனால் போலீசார், அருணின் ஒரு கையில் இருந்த விலங்கை மட்டும் கழற்றி அனுப்பினர். கழிவறையில் இருந்த அருண், திடீரென அங்கிருந்த கதவின் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அருணை பிடிக்க முயன்றும் முடியவில்லை. கைவிலங்குடன் தப்பி ஓடிய கைதி அருணை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story