தேவகோட்டை பகுதியில், தொடர் மழையால் நாசமான நெற்பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


தேவகோட்டை பகுதியில், தொடர் மழையால் நாசமான நெற்பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 9:44 PM GMT)

தேவகோட்டை பகுதியில் தொடர்மழையால் நெற்பயிர்கள் நாசமாயின. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவகோட்டை,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டங்களாகவே இருந்து வந்தது. இந்த இரு மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை வஞ்சிப்பு செய்வதால் இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் குடிதண்ணீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் மழையாக பெய்ததால் வறண்டு கிடந்த கண்மாய்கள் முழுவதும் நிரம்பி பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது.

இந்த நிலையில் இந்த தொடர் மழையை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் சில விவசாயிகள் முன்கூட்டியே குறுகிய கால நெல் பயிரிட்டிருந்தனர். மேலும் தேவகோட்டையைச் சுற்றியுள்ள புளியால், சருகணி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில வருடங்களாக பருவ மழை பொய்த்ததால் அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது பெய்த தொடர் மழையை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் குறுகிய கால நெல் சாகுபடி பயிர்களை பயிரிட்டிருந்தனர்.

அந்த பயிர்கள் தற்போது நெல்கதிர்கள் விட்ட நிலையில் இந்த தொடர் மழையினால் வயல்வெளிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து விளைந்து இன்னும் சிறிது காலத்தில் அறுவடை செய்ய இருந்த இந்த நெற்கதிர்கள் முற்றிலும் தண்ணீரில் சாய்ந்த நிலையில் மூழ்கியது. இதனால் நெற்பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் தற்போது காணப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் துயரத்தை சந்தித்துள்ளனர்.

இது குறித்து சின்ன கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய சங்க பிரமுகர் சேகர் என்பவர் கூறியதாவது:-

கடந்த நான்கு வருடங்களாக பருவ மழை பொய்த்ததால் இந்த பகுதியில் விவசாயம் அடியோடு பாதித்தது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில் இந்தாண்டு ஆரம்பத்திலேயே பருவ மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து விவசாயிகள் ஆர்வமுடன் நெல் விதைப்பு பணிகளை செய்து விட்டு அதன் பின்னர் களையெடுப்பு நடத்தி அதற்குரிய உரத்தை இட்டு நெல் விளைச்சலுக்காக காத்திருந்தனர்.

மேலும் சில வயல்களில் பயிரிடப்பட்ட குறுகிய கால பயிர்கள் தற்போது முன்னதாகவே கதிர் விட ஆரம்பித்தது. இந்த நிலையில் தொடர் மழையால் இங்கு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்்பயிர்களில் மழைநீர் தேங்கியதால் கதிர்கள் முற்றிலும் தண்ணீரில் சாய்ந்தது. மேலும் சில இடங்களில் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அழுகிய நிலையில் அதிலிருந்து முளைக்கவும் தொடங்கி உள்ளது. எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக மழையால் சேதமான நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்து அந்த விவசாயிகளுக்குரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவவாறு அவர் கூறினார். 

Next Story