அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கூட்டம்


அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 7:23 PM GMT)

கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தேர்தலையொட்டி கடை பிடிக்கப்படவேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந்தேதியும், குளித்தலை, கிரு‌‌ஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந்தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 4 விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலுமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. 14 (சனிக்கிழமை), 15-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) வேட்பு மனுக்கள் பெறப்படாது.

சமூக உணர்வுகளை தூண்டும் வகையில்...

எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள் மற்றும் சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினரிடையே நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையிலோ அல்லது ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ அல்லது கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக்கூடாது. வாக்காளருக்கு எந்த வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ கொடுக்கக்கூடாது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் அல்லது போக்குவரத்து சாதனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது. போதையூட்டும் மதுபானங்கள் அல்லது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வழங்கப்படும் கூட்டத்தை ஏற்பாடு செய்யக்கூடாது.

கொடிக்கம்பம்-பதாகை வைக்கக்கூடாது

அச்சடிப்பவர் மற்றும் வெளியீட்டாளரின் பெயர், முகவரி குறிப்பிடாமல் சுவரொட்டி, கைப்பிரதி, துண்டு பிரசுரம், சுற்றறிக்கை அல்லது விளம்பரத்தை அச்சடிக்கக் கூடாது. தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவுற நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் இருந்து முந்தைய 48 மணி நேரத்தில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. தொடர்புடைய உரிமையாளரின் அனுமதி, எழுத்துப் பூர்வ அனுமதி பெறப்படாமல் கொடிக்கம்பங்கள் கட்டவும், பதாகைகள் வைத்தல், சின்னங்கள் வரைதல் ஆகியவை கூடாது. ஒரு கட்சியால் வெளியிடப்படுகிற சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக்கூடாது. உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்தலாம்.

பொது இடங்களை சேதப் படுத்தும் வகையில் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள் அல்லது தாள்களை ஒட்டுதல் அல்லது வேறு விதங்களில் உருக்குலைத்தல் அல்லது கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள் முதலியவற்றை வைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடாது. அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் என்பதால் மாதிரி நடத்தை விதி ஊரக பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். நகர்ப்புற பகுதி களுக்கு பொருந்தாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) செல்வராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story