சிவகிரியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்


சிவகிரியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல் கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 7:55 PM GMT)

சிவகிரியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

சிவகிரி,

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வாசுதேவநல்லூர் செண்பக கால்வாய் ஓடை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (வயது 19). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

வாசுதேவநல்லூர் பங்களா தெருவை சேர்ந்தவர் மைதீன் மகன் முகம்மது அப்துல் அஜீஸ் (19). இவர் தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் வாசுதேவநல்லூரில் இருந்து சிவகாசிக்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு ஒரு மோட்டார் சைக்கிளை ஷோரூமில் பழுது நீக்கம் செய்யும் வேலைக்காக விட்டுவிட்டு மீண்டும் வாசுதேவநல்லூரை நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

மாரிச்செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரிக்கு வடபுறம் உள்ள ராணுவ வீரர்களின் நினைவு சின்னம் அருகே வந்தபோது முன்னால் சென்ற தனியார் கல்லூரி பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சாவு

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக இறந்தார். முகம்மது அப்துல் அஜீசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகிரியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story