கடந்த ஆண்டில், சாலை விபத்துகளில் 450 பேர் பலி - காவலன் செயலி விழிப்புணர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கடந்த ஆண்டில், சாலை விபத்துகளில் 450 பேர் பலி - காவலன் செயலி விழிப்புணர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 5:06 PM GMT)

கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 450 பேர் பலியாகி உள்ளதாக காவலன் செயலி விழிப்புணர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பேசினார்.

திண்டுக்கல்,

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 600-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பின்னர் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது, விதிமுறை மீறல், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல் போன்ற காரணங்களாலேயே அதிக விபத்துகள் ஏற்படுவது தெரியவந்தது.

இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பலனாக கடந்த ஆண்டு (2018) சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக குறைந்தது. இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்திடும் வகையில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம்.

அதாவது, மாணவிகள் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ‘ஹெல்மெட்’ அணிந்து தான் ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அத்துடன் சாலை விதிமுறைகளையும் பின்பற்றி வாகனம் ஓட்டும்படி அறிவுறுத்த வேண்டும். அப்போது சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவது வெகுவாக குறையும். பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புக்காக தற்போது ‘காவலன்’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியில் மாணவிகள் தங்களின் விவரங்கள், முகவரி, உறவினர்கள் விவரங்கள் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்தில் சிக்கும் பெண்கள் இந்த செயலி மூலம் போலீசாரை எளிதில் தொடர்புகொள்ள முடியும் என்றார். அதையடுத்து ‘காவலன் செயலி’ குறித்த செயல்முறை விளக்கமும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் பொருளியல் துறை பேராசிரியர் நலதம் மற்றும் நிர்வாகிகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story