விருத்தாசலம் அருகே, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மாணவர்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 7:31 PM GMT)

விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம், 

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் ரெயில்வே பாதை செல்கிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் நலன்கருதி சின்னவடவாடி, வடக்குப்பம், எருமனூர் கிராமங்களுக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மழைபெய்யும் போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் அதன்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. அதுபோல் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் அதன்வழியாக பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் செல்லமுடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் சிலர் தங்களது சட்டையை கழற்றி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்வண்ண நாதன் ஆகியோர் விரைந்து மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story