மாவட்ட செய்திகள்

பவானி அருகே, தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு + "||" + Near Bhavani, Ignoring the election Public Notice

பவானி அருகே, தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு

பவானி அருகே, தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு
பவானி அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளார்கள்.
பவானி,
 
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியான ஆண்டிகுளம், செங்காடு, காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் பவானி ஆற்றில் விடப்படுகிறது. அதனால் ஆற்று தண்ணீர் மாசு அடைவதாகவும். மேலும் பொதுமக்களுக்கு தோல்நோய், தொற்று நோய் ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

பொதுமக்களின் புகாரை தொடர்ந்து அதிகாரிகளும் அவ்வப்போது சாயப்பட்டறைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சாயப்பட்டறைகளின் கழிவுநீரை சுத்தப்படுத்த 100 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பவானி அடுத்துள்ள ஆண்டிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் சுமார் 60 ஏக்கர் இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தது. ஆனால் ஆண்டிக்குளம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், அனைத்து சாயக்கழிவுகளும் இங்கு கொண்டுவரும்போது, காற்றுமாசுபடும். எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஆண்டிக்குளம் காலனி பகுதியில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள காலனி பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். அருகே உள்ள ஏரியின் நீரும் மாசுபடும். அதனால் இந்த பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் என்று பல போராட்டங்களும் நடத்தி உள்ளோம். அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்ைல. அதனால்தான் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்கள்.