மாவட்ட செய்திகள்

போலீஸ் வேலை வாங்கி தருவதாக மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் கைது + "||" + Fraud to buy job

போலீஸ் வேலை வாங்கி தருவதாக மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் கைது

போலீஸ் வேலை வாங்கி தருவதாக மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 30). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்துள்ளது.

இந்தநிலையில், தனது மகனை போலீஸ்வேலையில் சேர்ப்பதற்காக துரைசாமி, சென்னை மண்ணடியில் உள்ள தனது நண்பரான இளந்தமிழன் என்பவர் மூலமாக அப்போது, சென்னை மணலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த குடியாத்தம் புதுமனைப்பகுதியை சேர்ந்த மோகன் (62) என்பவருக்கு ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, நேர்முகத் தேர்வுக்கு சென்ற கார்த்திக் தேர்வு ஆகவில்லை. இதையடுத்து, தனது மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு ஆகாததால், மோகனிடம் கொடுத்த பணத்தை துரைசாமி மற்றும் இளந்தமிழன் திருப்பி கேட்டுள்ளனர்.

மீண்டும் ஏமாற்றினார்

ஆனால் மோகன் பணத்தை போலீஸ் கமிட்டியில் கொடுத்து விட்டதாகவும், அதை மெதுவாக தான் பெற்றுத் தர முடியும் எனக் கூறி இரண்டு ஆண்டுகள் கழித்து சிறிது சிறிதாக 3 லட்ச ரூபாய் திருப்பி கொடுத்துள்ளார். அதன் பின்னர் கார்த்திக் 2-வது முறையாக சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்காக சென்றபோது, மோகனிடம் மீண்டும் மகனின் வேலைக்காக 3 லட்ச ரூபாயை துரைசாமி கொடுத்துள்ளார்.

ஆனால் கூறியது போல் மோகன், கார்த்திக்குக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தராமல் மீண்டும் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டரான மோகன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

கைது

இதையடுத்து, 3 வருடத்திற்கு மேலாகியும் மோகன் தான் வாங்கியுள்ள ரூ.4 லட்சத்தை துரைசாமிக்கு தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான துரைசாமி மற்றும் கார்த்திக் இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பெரம்பூரில் தங்கி இருந்த மோகனை பிடித்து, விசாரணை செய்ததில், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இந்தநிலையில், மோகன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.