ராணிப்பேட்டையில் 2 இடங்களில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


ராணிப்பேட்டையில் 2 இடங்களில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2019 4:00 AM IST (Updated: 12 Dec 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாததை கண்டித்து 2 இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை காரை நேரு நகர், முஸ்லிம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ராணிப்பேட்டை- தெங்கால் சாலையில் காரை அவுசிங்போர்டு அருகில் திடீரென பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காரை பகுதி அருகிலும் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் ராணிப்பேட்டை - தெங்கால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story