திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 53 டன் குப்பைகள் அகற்றம்


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 53 டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 1:36 PM GMT)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 53 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 10–ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை தமிழகம் மட்டுமின்ற மற்ற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சென்றனர். கிரிவலம் வந்த பக்தர்களுக்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா வழிகாட்டுதலின் பேரில் வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, அத்தியந்தல், ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சி பகுதிகளில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆர்.ஆனந்தன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பக்தர்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் கப்புகள், இலைகள் போன்ற குப்பைகள் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் கிரிவலப்பாதையில் முக்கிய பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் அன்னதான கழிவுகள் 16 குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம் சுமார் 53 டன் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் கிரிவலப் பாதையில் கொசு மருந்தும் அடிக்கப்பட்டது. நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Next Story